Kovilpatti ISAI FM
WhatsApp Image 2024-02-03 at 11.29.53 AM (1)

கோவில்பட்டியின் பெருமைகள்


கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள 2-வது தொழில் நகரமாகும். கோவில்படடியின் பழைய பெயா் திருமங்கை நகா்,பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்று அழைக்கப்படுகிறது.


கோவில்புரி சிறப்பு


அருள்மிகு பூவநாத சுவாமி உடன்உறை செண்பக வள்ளி அம்மன் திருக்கோவில் இங்கு அமைந்துள்ளது. இதன் வரலாறு 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது வெம்பக்கோட்டையை ஆண்ட செண்பக மன்னன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த கோவிலை கட்டி அதை சுற்றி கோவில்புரி  என்னும் ஊரை அமைத்தான். அதுவே இன்று கோவில்பட்டி என்று அழைக்கப்படுகிறது என்பது வரலாற்று செய்தி. 

கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை என்ற திருத்தலத்தில் குன்றின் மீது அமைந்த முருகன் ஆலயத்தில் வேல் வழிபாடு இன்றுவரை வழக்கத்தில் இருப்பது சிறப்புக்குரியதாகும்.


ஆலயக் கருவறையில் முருகப்பெருமானின் சிலை வடிவுக்கு பதிலாக, வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான், கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவில் ஆகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்து உள்ளது.

இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டியில் இத்தலம் வந்து சத்ரு சம்கார வேல் பதிகம், வேல்மாறல் ஆறு முறை பாராயணம் செய்து மூலவர் கதிர்வேலை வழிபட்டால் பகை, பில்லி, சூன்யம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும். சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து, கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிகப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவரை வழிபட வேண்டும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் இப்படிச் செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். சகல அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.


இத்தலத்தில் வழிபடுவது, இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரானது. கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்தக் கோவிலில் உள்ள வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, குழந்தை வரம் பெறுகிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு யாரும் செல்வதில்லை. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். சில நேரங்களில் நள்ளிரவு பொழுதுகளில் பஜனை சத்தம் கேட்பதாகவும் கூறுகிறார்கள். 

திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. திருக்கார்த்திகை நன்னாளில் இந்த சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்’ ஏற்றுகிறார்கள். இங்கு சூரசம்காரம் கந்த சஷ்டியில் வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் இருக்கிறது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனாய பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்த திருக்கோவில் இதுவாகும்.


கடலை மிட்டாய் சிறப்பு


பொதுவாக வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய் கடலை மிட்டாய் என்பது. இந்த மிட்டாய் மிகவும் சுவையானது. இதனால் இந்த மண்ணுக்கு அன்று முதல் இன்று வரை பெருமை சேர்த்து வருகிறது கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அது மிகையில்லை. இதனால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று விற்பனையிலும் தனி முத்திரை பதித்து அனேக குடும்ப உறுப்பினர்களுக்கு நல் வாழ்வு அழித்து வருவது மிகச் சிறப்பு. 


கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு 2020, ஏப்ரலில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34 ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது. இந்த வட்டார மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளது. 

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு சிறப்பு எப்படி கிடைத்தது என்றால் உற்பத்தி செய்த காலம் முதல் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு கோவில்பட்டியில் இருந்து பயணம் மேற்கொள்கிறவர்கள் முதல் திண்பண்டமாக கோவில்பட்டி கடலை மிட்டாயை மறக்காமல் வாங்கிச் சென்று உறவினர்கள், நண்பர்களுக்கு அளித்தது பெருமை செய்ததுதான். இதனால் தொடர்ந்து மென்மேலும் விற்பனை அதிகரித்து. பொருளாதார வளர்ச்சி மேன்மை அடைந்தது. 


ஹாக்கியின் சிறப்பிடம் 


கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டின் தந்தை மருத்துவர் துரைராஜ். இவர்தான் கோவில்பட்டி வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட ஏற்பாடு செய்து கொடுத்தார்.

உலக ஹாக்கி தந்தை என்று அழைக்கப்படும் மேஜர் தயான் சந்த் 1952-ம் ஆண்டு கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த கோடைகால ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனால் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஹாக்கி போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைக்க மாணவ, மாணவியரிடையே ஒரு உத்வேக எழுச்சி ஏற்பட்டு மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்கள் ஏராளம். 


தொழில் சிறப்பு 


இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, பருத்தி உட்பட பலவகையான சிறுதானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.இங்கு அதிகளவில் தீப்பட்டி தயாரிக்கப்படுகிறது.இங்கு ஒரு சில பட்டாசு தொழிற்சாலைகளும் உள்ளது.


எழுத்தாளர்கள் சிறப்பு 


கி. ராஜநாராயணன்


கரிசல் இலக்கியத்தின் தந்தை என அன்புடன் அனைவராலும் போற்றப்படும் கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021), கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 

கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். இவரது நினைவாக கி. ராஜநாராயணன் நூற்றாண்டு நினைவு மண்டபம் மிக கம்பீரமாக காட்சி அளிப்பதும் கோவில்பட்டிக்கு மிகவும் பெருமை சேர்க்கிறது. 


சோ. தர்மன் 

சோ.தர்மன் (8 ஆகஸ்ட் 1953 ல் பிறந்தவர்) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் மிக மிக முக்கியமானவர். இவர் தனது குருவாக மதிக்கும் கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர்.


விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார். ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பூமணி அவர்களின் மருமகன் இவர். சோ.தர்மன் கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, 


எழுத்தாளர் உதயசங்கர்


இவர் 1960ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். ரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பு வகிப்பது இந்த மண்ணிற்கு பெருமை. 


இவர் சிறுகதை நூல்கள், குறுநாவல், கவிதை நூல்கள், குழந்தை இலக்கியம், மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு,  ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரை நூல்கள் என பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது, உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது, விகடன் சிறுவர் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கு “ஆதனின் பொம்மை” என்ற நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை விருது பெற்ற பெருமை கோவில்பட்டி நகருக்கு உண்டு.


கரிசல் பூமியும் (கோவில்பட்டியும்) திரையுலகமும் 


பலவகையிலும் சிறப்புப் பெற்ற கோவில்பட்டியும் அதனைச் சுற்றியுள்ள கரிசல்பூமியும் திரையுலகத்தையும் விட்டு வைக்கவில்லை. 


"தண்ணீர் தண்ணீர்" எனப் புகழ்பெற்ற பாலச்சந்தரின் திரைப்படம் நமது கரிசல் மண்ணின் மஞ்சநாயக்கன்பட்டி, குருமலை பகுதிகளில் படமாக்கப்பட்டது. 


சிறந்த நகைச்சுவை குணச்சித்திர நடிகர் சார்லி நமது கோவில்பட்டியில் பிறந்தவர்.


 "கோவில்பட்டி வீரலெட்சுமி" என்ற திரைப்படம் நம் மண்ணின் வீரத்தையொட்டி எழுந்தது. 


நமது காருகுறிச்சியாரின் “சிங்கார வேலனே தேவா” நாதஸ்வர இசையில் புகழ்பெற்றது. “கொஞ்சும் சலங்கை" 


கரிசல்மண்ணின் வீரசுதந்திர வரலாற்றை, காலத்தால் அழியாத காவியமாக தந்தது.

வீரபாண்டியன் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாரதியார் திரைப்படங்கள். 


சிறந்த தேசிய நடிகர் விருதை தனுஷ்க்கு தேடி தந்தது.நமது சாகித்ய அகாடமி எழுத்தாளர் பூமணி எழுதி “வெக்கை" நாவல் அசுரன் என்ற பெயரில். 


சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பெருமை பெற்றது. நமது பூமணியின் திரைக்கதை உரையாடலில் மலர்ந்த "கருவேலம் பூக்கள்".


எட்டயபுரம் மன்னர்களில் ஒருவராகிய காசிப்பாண்டியன் சிறந்த எழுத்தாளர். இவர் எழுதிய “தயாளன்" என்ற நாடகம் மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் திரைப்படமாக்கப்பட்டது. பி.யூ. சின்னப்பா கதாநாயகனாக நடித்தார். 


சாகித்ய அகாதெமி விருது பெற்ற கரிசல்மண்ணின் சிறந்த எழுத்தாளர் பொன்னீலனின் “உறவுகள்" என்னும் குறுநாவல் மகேந்திரனின் இயக்கித்தில் "பூட்டாத பூட்டுக்கள்" திரைப்படமாக மலர்ந்தது. 


"கிடாரி" திரைப்படம் நமது கோவில்பட்டி முருகேசனின் படைப்பு.


முற்போக்கு சிந்தனை எழுத்தாளர் திரு. ச. தமிழ்ச்செல்வனின் கதையில் சசி இயக்கத்தில் அன்றே பாராட்டுப் பெற்றது “பூ” திரைப்படம். “வெயிலோடு போய்” என்னும் இவரது கதை “பூ” வாக மலர்ந்தது. தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது பெற்றது. 


இன்று சிறந்த குணச்சித்திர நடிகராக பல படங்களில் வலம் வரும் எழுத்தாளர் திரு. வேலஇராமமூர்த்தி இந்த கரிசல்மண்ணின் மைந்தரே. 


வல்லநாடு தந்த சிறந்த பன்முக நடிகர் டெல்லி கணேஷ் பாரதியாராக முதலில் நடித்தவர். நமது கோவில்பட்டி இலக்கிய நிகழ்வில் பலமுறை கலந்து மகிழ்ந்தவர். மகிழ்கின்றவர்.


கோவில்பட்டி அய்யாப்பிள்ளை அவர்களும் திரைப்பட வசனகர்த்தா என்பது குறுப்பிடத்தக்கது.


தற்போது நம்மத்தியில் வலம் வரும் இளைஞர் T. வசந்த் "வியூகம்" என்னும் திரைப்பட இயக்கத்திலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இவரது குறும்படங்கள் இன்று கோவில்பட்டியில் வலம் வருகின்றன. 


நமது கி.ரா. அவர்களின் “கிடை” நாவல் "ஒருத்தி" என்ற பெயரில் திரைப்படமானது . கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்றது. கேரளத்தின் “சலச்சித்ரா விருது". புதுவை அரசின் மாநில விருது என்பன பெற்று கரிசல்மண்ணின் பெருமையை பறைசாற்றுகிறது. 


கரிசல்மண்ணின் இயல்பை - பாசத்தை - அண்ணன் - தங்கை உயரிய உயர்வை உணர்த்திய கரிசல் பூமியையே சுற்றி வந்த விஜயகுமார் ராதிகா நடித்த "கிழக்கு சீமையிலே" திரைப்படத்தை மறக்க முடியுமா? 


சின்ன கலைவாணர் விவேக் நமது கோவில்பட்டி நகரை வலம்  வந்தவர். 


இன்னும் விடுபட்ட இந்த கரிசல்மண்ணின் திரையுல திலகங்கள் ஏராளம் ஏராளம் .... பதிவுகள் தொடரும்.